௨௮
வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள்.
௧ சமாரியாவைப் பாருங்கள்!
எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள்.
மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது.
சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
௨ பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு புயலைப் போன்று நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார்.
அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.
௩ எப்பிராயீமிலுள்ள குடிகார ஜனங்கள் தமது “அழகான மகுடத்தைப்” பற்றி பெருமை கொள்கிறார்கள்.
ஆனால், அந்த நகரம் மிதியுண்டு போகும்.
௪ மலைக்குமேல் வளமான பள்ளத்தாக்கு சுற்றிலும் இருக்க இந்நகரம் உள்ளது.
அந்த “அழகான பூக்களாலான மகுடம்” வாடும் செடியைப் போன்றுள்ளது.
அந்த நகரம் கோடையில் முதலில் பழுத்த அத்திப்பழம் போன்றது.
ஒருவன் அப்பழத்தில் ஒன்றைப் பார்க்கும்போது, அவன் உடனே அதனை எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான்.
௫ அந்தக் காலத்திலே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “அழகான மகுடமாக” ஆவார். அவர் “ஆச்சரியத்துக்குரிய பூக்களாலான மகுடமாக” விடுபட்ட தன் ஜனங்களுக்கு இருப்பார்.
௬ பிறகு கர்த்தர் தமது ஜனங்களை ஆளுகின்ற நீதிபதிகளுக்கு ஞானத்தைக் கொடுப்பார். நகர வாசல்களில் நடைபெறும் போர்களில் கர்த்தர் தம் ஜனங்களுக்குப் பலத்தைக் கொடுப்பார்.
௭ ஆனால் இப்போது, அந்தத் தலைவர்கள் குடித்திருக்கிறார்கள். ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் திராட்சை ரசத்தையும் மதுவையும் குடித்திருக்கிறார்கள். அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். தீர்க்கதரிசிகள் தங்கள் கனவுகளைக் காணும்போது குடித்திருக்கிறார்கள். நீதிபதிகள் தங்கள் முடிவை எடுக்கும்போது குடித்திருக்கிறார்கள்.
௮ ஒவ்வொரு மேசையும் வாந்தியால் நிறைந்துள்ளது. சுத்தமான இடம் எங்குமே இல்லை.
தேவன் அவரது ஜனங்களுக்கு உதவ விரும்புகிறார்
௯ கர்த்தர் ஜனங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க விரும்புகிறார். கர்த்தருடைய போதனைகளை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், ஜனங்களோ சிறு குழந்தைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்னரே பால்குடிப்பதை மறந்த குழந்தைகளைப் போன்று இருக்கிறார்கள். ௧௦ எனவே, கர்த்தர் அவர்களைக் குழந்தைகளாக எண்ணி:
சா லசவ் சா லசவ்
குவா லகுவா குவா லகுவா
சீர் ஷேம் சீர் ஷேம்
௧௧ என்பதுபோன்ற விநோதமான மொழியில் பேசுவார். அவர் அந்த ஜனங்களோடு வேறு மொழிகளையும் பயன்படுத்துவார்.
௧௨ கடந்த காலத்தில் தேவன் அந்த ஜனங்களோடு பேசினார். அவர், “இங்கே ஓய்விடம் உள்ளது. இது சமாதானமான இடம். சோர்ந்துபோன ஜனங்கள் வந்து ஓய்வுகொள்ளட்டும். இது சமாதானத்திற்குரிய இடம்” என்றார்.
ஆனால், அந்த ஜனங்கள் தேவனைக் கவனிக்க விரும்பவில்லை. ௧௩ எனவே, தேவனிடமிருந்து வந்த:
சா லசவ் சா லசவ்
குவா லகுவா குவா லகுவா
என்பது போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அந்நிய மொழியைப் போன்று இருந்தது.
ஜனங்கள் தங்கள் சொந்த வழிகளில் நடந்தார்கள். எனவே, ஜனங்கள் பின்னிட்டு விழுந்து தோற்கடிக்கப்பட்டார்கள். ஜனங்கள் வலையில் அகப்பட்டு கைப்பற்றப்பட்டனர்.
தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது
௧௪ கர்த்தருடைய செய்தியை எருசலேமிலுள்ள தலைவர்களாகிய நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் அவர் சொல்வதைக் கவனிக்க மறுக்கிறீர்கள்.
௧௫ நீங்கள், “நாங்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்களுக்கு மரணத்தின் இடமாகிய பாதாளத்துடன் ஒப்பந்தம் உள்ளது. எனவே நாங்கள் தண்டிக்கப்படமாட்டோம். தண்டனை எங்களைக் கடந்துபோகும். அது எங்களைப் பாதிக்காது. நாங்கள் எங்களது தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப்பின் மறைந்து கொள்வோம்” என்று சொல்கிறீர்கள்.
௧௬ ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போகமாட்டான்.
௧௭ “சுவர் நேராக இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள ஒரு அளவுக் கருவியை ஜனங்கள் பயன்படுத்துகின்றனர். அதே வழியில் நான் நீதியையும், நன்மையையும் பயன்படுத்தி எது சரியென்று காட்டுகிறேன்.
“தீய ஜனங்களாகிய நீங்கள் உங்கள் தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப் பின்னால் மறைகிறீர்கள். ஆனால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஒரு புயல்அல்லது வெள்ளம் வருவதுபோன்று வந்து உங்கள் மறைவிடங்களை அழிக்கும். ௧௮ மரணத்தோடு உங்களுக்குள்ள ஒப்பந்தம் நீக்கப்படும். பாதாளத்துடனுள்ள ஒப்பந்தம் உங்களுக்கு உதவாது.
“எவனோ ஒருவன் வந்து உங்களைத் தண்டிப்பான். அவன் உங்களைப் புழுதியாக்கி நடந்து போவான். ௧௯ அப்பகைவன் இரவு பகலாகத் தன் சேனையுடன் உங்கள் நாட்டின் மீது வருவான். இந்தச் செய்தியை அறிபவர் யாராயினும் அச்சத்தால் நடுங்குவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
௨௦ “பிறகு, நீங்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வீர்கள்: ஒருவன் அவனை விடச் சிறிய ஒரு படுக்கையில் தூங்க முயல்கிறான். அவனிடம் ஒரு போர்வை உள்ளது. ஆனால் அது அவனை மூடப் போதுமானதாக இல்லை. அந்தப் படுக்கையும் போர்வையும் பயனற்றவை. அவற்றைப் போன்றே உங்கள் ஒப்பந்தங்களும் உள்ளன”.
௨௧ பெராத்சீம் மலையில் கர்த்தர் போர் செய்தது போலவே செய்வார். கிபியோனின் பள்ளத்தாக்கிலே இருந்ததுபோலவே, கர்த்தர் கோபத்தோடு இருப்பார். பிறகு, தான் செய்ய வேண்டியவற்றைக் கர்த்தர் செய்வார். சில விநோதமானவற்றைக் கர்த்தர் செய்வார். ஆனால் அவர் தன் வேலையை முடிப்பார். அவரது வேலையும் விநோதமானதாகும். ௨௨ இப்பொழுது, நீங்கள் அவற்றுக்கு எதிராகப் போரிட வேண்டாம். நீங்கள் செய்தால், உங்களைச் சுற்றியுள்ள கயிறுகள் இறுக்கும்.
நான் கேட்ட வார்த்தைகள் மாறாது. அந்த வார்த்தைகள் பூமியை ஆளுகின்ற சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தவை. இது நிகழ்ந்தே தீரும்.
கர்த்தர் சரியாகத் தண்டிக்கிறார்
௨௩ நான் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தியை நெருக்கமாகக் கவனியுங்கள். ௨௪ எல்லா நேரத்திலும் ஒரு விவசாயி உழுதுகொண்டிருப்பானா? இல்லை. ௨௫ ஒரு விவசாயி பூமியைத் தயார் செய்கிறான், பிறகு அவன் விதைகளை விதைக்கிறான். விவசாயி பல் வேறு வழிகளில் பல்வேறு விதைகளைத் தூவுகிறான். ஒரு விவசாயி உளுந்தைத் தூவுகிறான். சீரகத்தைப் போடுகிறான். வரிசைகளில் கோதுமையை விதைக்கிறான், வாற்கோதுமையை அதற்குரிய சிறப்பான இடத்தில் தூவுகிறான், கம்பை வயலின் ஓரங்களில் விதைக்கிறான்.
௨௬ நமது தேவன் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தன் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர் நீதியாக இருக்கிறார் என்பதை இந்த உதாரணம் காட்டும். ௨௭ ஒரு விவசாயி உளுந்து தாலத்தாலே போரடிக்கச் செய்வானா? செய்யமாட்டான். ஒரு விவசாயி சீரகத்தின் மேல் வண்டியின் உருளையைச் சுற்றவிடுவானா? இல்லை. உளுந்தைக் கோலினாலும் சீரகத்தை மிலாற்றினாலும் அடிப்பான்.
௨௮ ஒரு பெண் அப்பம் செய்யும்போது, மாவைப் பிசைந்து கையால் அழுத்துவாள். ஆனால் அவள் இதனை எப்பொழுதும் செய்யமாட்டாள். கர்த்தர் இதே வழியில் தன் ஜனங்களைத் தண்டிக்கிறார். அவர் வண்டிச் சக்கரத்தால் அவர்களைப் பயமுறுத்துவார். ஆனால் அவர் முழுமையாக நசுக்குகிறதுமில்லை. அவர் பல குதிரைகள் அவர்களை மிதிக்க விடுகிறதுமில்லை. ௨௯ இப்படி இந்த பாடம் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிறது. கர்த்தர் ஆச்சரியகரமான ஆலோசனைகளைத் தருகிறார். தேவன் உண்மையான ஞானம் உடையவர்.
*௨௮:௧௩: சா...ஷேம் இது எபிரேய பாடல். குழந்தைகளுக்கு எப்படி எழுதுவது என்று கற்பிப்பது. குழந்தை அல்லது அந்நியர்கள் பேசுவது போன்றது, இதன் பொருள்: ஒரு ஆணை இங்கே ஒரு ஆணை அங்கே. ஒரு ஆட்சி இங்கே ஒரு ஆட்சி அங்கே. ஒரு பாடம் இங்கே. ஒரு பாடம் அங்கே.