௨௭
பிலாத்துவின் முன் இயேசு
(மாற். 15:1; லூ. 23:1-2; யோவான் 18:28-32)
௧ தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். ௨ அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.
யூதாஸின் தற்கொலை
(அப். 1:18–19)
௩ இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். ௪ யூதாஸ், “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.
அதற்கு யூதத் தலைவர்கள், “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.
௫ ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.
௬ வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள், “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, ௭ அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. ௮ எனவே தான் அந்த நிலம் இன்னமும் “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. ௯ தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.
 
“அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. ௧௦ கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.”* ‘கர்த்தர்...பயன்படுத்தினார்கள்’ சக. 11:12-13.
பிலாத்துவின் விசாரணை
(மாற். 15:2-5; லூ. 23:3-5; யோவான் 18:33-38)
௧௧ இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான். “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆம், நானே தான்” என்றார்.
௧௨ தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.
௧௩ ஆகவே பிலாத்து இயேசுவிடம், “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான்.
௧௪ ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.
இயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி
(மாற். 15:6-15; லூ. 23:13-25; யோவான் 18:39-19:16)
௧௫ ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். ௧௬ அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.
௧௭ பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். ௧௮ பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.
௧௯ நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில், “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.
௨௦ ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.
௨௧ பிலாத்து, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மக்கள் “பரபாஸ்” என்று சொன்னார்கள்.
௨௨ “அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான்.
“அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.
௨௩ “அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.
ஆனால் மக்கள் அனைவரும் “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
௨௪ மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.
௨௫ “அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.
௨௬ பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.
இயேசுவைக் கேலி செய்தல்
(மாற். 15:16-20; யோவான் 19:2-3)
௨௭ பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். ௨௮ எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். ௨௯ வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள். “வணக்கம் யூதர்களின் அரசரே” என்றார்கள். ௩௦ அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். ௩௧ இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.
இயேசு சிலுவையில் கொல்லப்படுதல்
(மாற். 15:21-32; லூ. 23:26-39; யோவான் 19:17-19)
௩௨ போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். ௩௩ மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். ௩௪ அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.
௩௫ போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். ௩௬ போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். ௩௭ இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
௩௮ இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். ௩௯ மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், ௪௦ “தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர்.
௪௧ தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். ௪௨ அவர்கள், “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். ௪௩ இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். ௪௪ அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.
இயேசுவின் மரணம்
(மாற். 15:33-41; லூ. 23:44-49; யோவான் 19:28-30)
௪௫ நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. ௪௬ சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” சங்கீதம் 22:1-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்பதாகும்.
௪௭ அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள், “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.
௪௮ உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். ௪௯ ஆனால் மற்றவர்கள், “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.
௫௦ மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.
௫௧ இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. ௫௨ கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். ௫௩ கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.
௫௪ இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள், “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.
௫௫ பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். ௫௬ மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.
இயேசு அடக்கம் செய்யப்படுதல்
(மாற். 15:42-47; லூ. 23:50-56; யோவான் 19:38-42)
௫௭ அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் ௫௮ யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். ௫௯ பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். ௬௦ இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.
இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். ௬௧ மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
இயேசுவின் கல்லறைக்கு காவல்
௬௨ ஆயத்தநாளுக்கு ஆயத்தநாள் வெள்ளிக்கிழமை. வார ஓய்வுத் திருநாளுக்கு முந்தின நாள். மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, ௬௩ “ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். ௬௪ ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.
௬௫ அதற்கு பிலாத்து, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். ௬௬ ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.

*௨௭:௧௦: ‘கர்த்தர்...பயன்படுத்தினார்கள்’ சக. 11:12-13.

௨௭:௪௬: சங்கீதம் 22:1-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

௨௭:௬௨: ஆயத்தநாள் வெள்ளிக்கிழமை. வார ஓய்வுத் திருநாளுக்கு முந்தின நாள்.