௪
௧ “மனுபுத்திரனே, ஒரு செங்கல்லை எடு. அதன் மீது எருசலேம் நகரத்தின் படத்தை வரை. ௨ பிறகு நகரத்தைச் சுற்றி முற்றுகையிடும் படை போல நடி. நகரத்தைத் தாக்க உதவுவதற்கு, அதைச் சுற்றி மதிலைக் கட்டு. நகரத்தின் சுவர்வரை போகும் ஒரு மண் பாதையைப் போடு, இடிக்கும் கருவிகளைக் கொண்டு வா. நகரத்தைச் சுற்றிப் படை முகாம்களை ஏற்படுத்து. ௩ பிறகு ஒரு இரும்பு தகட்டினை எடுத்து உனக்கும் நகரத்திற்கும் இடையில் வை, அது உன்னையும் நகரத்தையும் பிரிக்கின்ற இருப்புச் சுவரைப் போன்றது. இவ்வாறு நீ நகரத்திற்கு எதிரானவன் என்பதைக் காட்டுவாய். நீ முற்றுகையிட்டு நகரத்தைத் தாக்குவாய். ஏனென்றால், இது இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நான் (தேவன்) எருசலேமை அழிப்பேன் என்பதை இது காட்டும்.
௪ “பின்னர் நீ உனது இடதுபக்கத்தில் படுக்க வேண்டும். உனக்குக் காட்டுகிறபடி நீ செய்ய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவத்தை நீயே சுமக்கவேண்டும். நீ இடதுபுறமாக எவ்வளவு நாட்கள் படுத்திருக்கிறாயோ அத்தனை நாட்கள் நீ அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய். ௫ நீ 390 நாட்கள் இஸ்ரவேலரின் குற்றங்களைச் சுமக்கவேண்டும். இவ்வாறு, நான் இஸ்ரவேல் எவ்வளவு காலம் தண்டிக்கப்படும் என்பதை ஒரு நாள், ஒரு ஆண்டுக்குச் சமமாகக் கணக்கிட்டுச் சொல்வேன்.
௬ “அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.
௭ தேவன் மீண்டும் பேசினார். அவர், “இப்பொழுது, நீ உனது சட்டை கைகளைச் சுருட்டிக்கொள், செங்கலுக்கு மேலாக உன் கரத்தை உயர்த்து. எருசலேம் நகரத்தைத் தாக்குவதுபோன்று நடி. நீ ஜனங்களிடம் எனது தூதுவனைப்போன்று பேசுகிறாய் என்பதைக் காட்ட இதனைச் செய். ௮ இப்பொழுது பார். நான் உன் மேல் கயிற்றைக் கட்டுகிறேன். நகரத்திற்கு எதிராக உனது தாக்குதல் முடியுமட்டும் உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு உருளமுடியாது” என்றார்.
௯ தேவன் மேலும் சொன்னார்: “நீ ரொட்டி செய்வதற்கு கொஞ்சம் தானியத்தைப் பெறவேண்டும். கொஞ்சம் கோதுமை, வாற்கோதுமை, மொச்சை, அவரைக்காய், தினை, கம்பு ஆகியவற்றையும் பெறு, ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு கலந்து மாவாக்கு. நீ இதனை ரொட்டி செய்யப் பயன்படுத்து. நீ 390 நாட்கள் ஒரு பக்கமாகப் படுத்திருக்கும்போது இந்த ரொட்டியையே உண்பாய். ௧௦ இம்மாவில் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டுமே ரொட்டி செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாய். நீ வேளாவேளைக்கு அந்த உணவை உண்பாய். ௧௧ நீ ஒவ்வொரு நாளும் 3 கோப்பை தண்ணீரைமட்டுமே குடிக்க அனுமதிக்கப்படுவாய். இதை நீ ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்குக் குடிக்க அனுமதிக்கப்படுவாய். ௧௨ உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுட வேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ணவேண்டும்”. ௧௩ பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.
௧௪ பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன் “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்றைக்கும் அசுத்தமான உணவை உண்டதில்லை. நான் இது வரை நோயால் மரித்த அல்லது காட்டுமிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைத் தின்றதில்லை. நான் சிறுவனாய் இருந்த நாள் முதல் இன்றுவரை அசுத்தமான இறைச்சியைத் தின்றதில்லை. இத்தகைய மோசமான இறைச்சி என் வாய்க்குள் நுழைந்ததில்லை”.
௧௫ பிறகு தேவன் என்னிடம் சொன்னார் “சரி! நான் உனது அப்பத்தை சுடுவதற்கு உலர்ந்த மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறேன். நீ காய்ந்த மனிதமலத்தைப் பயன்படுத்த வேண்டாம்.”
௧௬ பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமிற்கு விநியோகம் ஆகும் உணவை அழிக்கிறேன். ஜனங்களிடம் உண்பதற்குச் சிறிதளவு உணவு உள்ளது. அவர்கள் தமது உணவு விநியோகத்தைப் பற்றிக் கவலையோடு இருப்பார்கள். அவர் களிடம் குடிப்பதற்குச் சிறிது அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது மிகவும் பயப்படுவார்கள். ௧௭ ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.