௮
தாவீதுக்கு பல போர்களில் வெற்றி
௧ இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தியரை
வென்றான். பெலிஸ்தியரின் தலைநகரம் பரந்த நிலப்பகுதியைக் கொண்ட நகரமாக இருந்து வந்தது. தாவீது அந்த இடங்களின் ஆட்சியைக் கைப்பற்றினான். ௨ மோவாபின் ஜனங்களையும் தாவீது தோற்கடித்தான். அவர்கள் எல்லோரையும் தரை மட்டும் பணியச் செய்தான். பின் அவர்களை வரிசைகளாக ஒரு கயிற்றினால் பிரித்தான். அவர்களில் இரண்டு வரிசை ஆட்களைக் கொன்றான். மூன்றாவது வரிசை ஆட்களை உயிரோடுவிட்டான். இவ்விதமாக மோவாபின் ஜனங்கள் தாவீதின் பணியாட்களாயினர். அவர்கள் தாவீதுக்கு கப்பம் கட்டினார்கள்.
௩ ரேகோபின் மகனாகிய ஆதாதேசர் சோபாவின் அரசனாக இருந்தான். ஐபிராத்து நதியருகேயுள்ள நிலப்பகுதியை தாவீது கைப்பற்றுவதற்காகச் சென்றபோது தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்தான். ௪ ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.
௫ சோபாவின் அரசனாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான். ௬ பின் தாவீது, ஆராமிலுள்ள தமஸ்குவில் வீரர்களைக் கூட்டம் கூட்டமாக நிறுத்தினான். ஆராமியர்கள் தாவீதின் பணியாட்களாகி அவனுக்கு கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
௭ ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான். ௮ பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)
௯ ஆமாத்தின் அரசனாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற் கடித்ததைக் கேள்வியுற்றான். ௧௦ எனவே, தோயீ தன் மகனாகிய யோராமைத் தாவீது அரசனிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான். ௧௧ தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான். ௧௨ ஆராம், மோவாப். அம்மோன், பெலிஸ்தியா, அமலேக்கு ஆகிய நிலப்பகுதிகளை தாவீது வென்றான். சோபாவின் அரசனும் ரேகோபின் மகனாகிய ஆதாதேசரையும் தாவீது வென்றான். ௧௩ தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான். ௧௪ தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் ஆட்சி
௧௫ இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்தான். தாவீது தனது ஜனங்கள் எல்லோருக்கும் சிறந்த நன்மையான தீர் மானங்களை எடுத்தான். ௧௬ செருயாவின் மகனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். ௧௭ அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான். ௧௮ யோய்தாவின் மகனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும்* கிரேத்தியர் பிலேத்தியர் இவர்கள் தாவீதின் சிறப்புக்குரிய மெய்க்காப்பாளர்கள். அரமயிக் மொழி பெயர்ப்பின்படி வில்வீரர்களும் கல் வீச்சாளர்களும். இதன்படி இவர்கள் வில், அம்பு, கல் போன்றவற்றைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டவர்கள் எனப் பொருள்படும். பொறுப்பாளியாக இருந்தான். தாவீதின் மகன்களும் முக்கிய தலைவர்களாக இருந்தார்கள்.
*௮:௧௮: கிரேத்தியர் பிலேத்தியர் இவர்கள் தாவீதின் சிறப்புக்குரிய மெய்க்காப்பாளர்கள். அரமயிக் மொழி பெயர்ப்பின்படி வில்வீரர்களும் கல் வீச்சாளர்களும். இதன்படி இவர்கள் வில், அம்பு, கல் போன்றவற்றைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்டவர்கள் எனப் பொருள்படும்.