மீகா
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் தீர்க்கதரிசியான மீகா. (மீகா 1:1). மீகா ஒரு கிராமத்து தீர்க்கதரிசி, சமுதாயத்திலும் நடக்கும் விக்கிர ஆராதனைக்கும், அநியாயத்திற்கும், வரப்போகும் தேவனுடைய கோபாக்கினியை தெரியப்படுத்த, பட்டணத்திற்கு அனுப்பப்பட்டவன். மீகா விவசாயம் செய்யும் ஊர்களில் வசித்தவன், தேசத்தின் அரசாங்க அதிகாரத்துக்கு தூரமாயிருந்தான். தள்ளுண்டவர்கள்மீதும் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் மீதும் கரிசனைக் கொண்டிருந்தான். (மீகா 4:6). இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்தும் அவருடைய நித்திய குணங்களைக் குறித்தும், பிறக்கும் ஊரான பெத்லேகேமைக் குறித்தும் பழைய ஏற்பாட்டில் 700 வருடங்களுக்கு முன்பாக எழுதியிருக்கிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 730 க்கும் 650 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது. இஸ்ரவேலின் வட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைமுன் முதல் வார்த்தைகள் எழுதப்பட்டது. (1:2-7).
அடுத்த பகுதிகள் பாபிலோனின் சிறையிருப்பின் போதும், சில பகுதிகள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகும் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
வட தேசமான இஸ்ரவேல் தேசத்திற்கும், தென்தேசமான யூதாவுக்கும் எழிதினான்.
எழுதப்பட்ட நோக்கம்
இஸ்ரவேல், யூதா தேசங்களின் மீதும் வரும் நியயத்தீர்ப்பையும், ஆயிரவருட அரசாட்சியில் தேவ ஜனங்கள் மறுபடியும் திரும்ப இஸ்ரவேல் தேசத்தில் நாட்டப்படுவார்கள் என்ற இரண்டு காரியத்தை அதிகமாக மீகா எழுதியிருக்கிறான். ஜனங்கள் சுயநலமாக வாழ்ந்தபோதும் அவர்களுக்காக தேவன் செய்த நன்மைகளை தேவன் ஞாபகப்படுத்தினார்.
மையக் கருத்து
தேவனின் நியாயத் தீர்ப்பு
பொருளடக்கம்
1. நியாயத்தீர்ப்பு செய்ய தேவன் வருகிறார் — 1:1-2:13
2. அழிவின் செய்திகள் — 3:1-5:15
3. கண்டனக் குரலின் செய்திகள் — 6:1-7:10
4. முடிவுரை — 7:11-20
அத்தியாயம் 1
1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.
இஸ்ரவேலின்மேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பு
2 அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார். 3 இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். 4 மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். 5 இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? 6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். 7 அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.
இஸ்ரவேல் மற்றும் யூதாவுக்காகப் புலம்புதல்
8 இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். 9 அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது. 10 அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. 11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது. 12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. 13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது. 14 ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும். 15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள்* 1:15 மகிமையாகிய அதுல்லாம் வரை வருவார்கள். 16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.