2 தீமோத்தேயு
ஆசிரியர்
ரோம சிறையில் இருந்து பவுல் விடுவிக்கப்பட்ட பிறகு, நான்காவது மிஷனரி பயணத்தின்போது, 1 தீமோத்தேயு எழுதினார், பவுல் மீண்டும் பேரரசர் நீரோவினால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் அவர் 2 தீமோத்தேயு எழுதினார். அவரது முதல் சிறைத்தண்டனைக்கு மாறாக, அவர் ஒரு வாடகை வீட்டில் (அப்போஸ்தலர் 28: 30) வசித்த போது, இப்போது ஒரு சாதாரண குற்றவாளி போல (1: 16; 2: 9) சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு குளிர்ச்சியான சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் (4: 13). பவுல் தன்னுடைய வேலையைச் செய்து முடித்துவிட்டார் என்றும் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது (4: 6-8) என்பதை அறிந்திருந்தார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறத்தாழ கிபி 66-67 இடையில் எழுதப்பட்டது.
பவுல் ரோமிலிருந்த 2 வது முறையாக சிறைத்தண்டனை அனுபவித்தார், அவர் மரண தண்டனைக்குக் காத்திருக்கும்போது இந்த கடிதத்தை எழுதினார்.
யாருக்காக எழுதப்பட்டது
தீமோத்தேயுவே இரண்டாம் தீமோத்தேயு நிருபத்தின் முக்கிய வாசகர் ஆவார், ஆனால் அவர் விஷயங்களை சபைக்கு பகிர்ந்து கொண்டார்.
எழுதப்பட்ட நோக்கம்
இறுதியான உற்சாகத்தோடும் பாராட்டுகளோடும் பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த வேலையை தைரியத்தோடும் (1: 3-14), குறிக்கோளுடனும் (2: 1-26), மற்றும் விடாமுயற்சியுடனும் (3: 14-17; 4: 1-8) தொடரும்படி தீமோத்தேயுவை விட்டுச் செல்வதற்காக.
மையக் கருத்து
விசுவாசமுள்ள ஊழியத்திற்கு ஒரு பொறுப்பு
பொருளடக்கம்
1. ஊழியத்திற்கான உற்சாகம் — 1:1-18
2. ஊழியத்தில் முன்மாதிரி — 2:1-26
3. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கை — 3:1-17
4. உற்சாகத்தின் வார்த்தைகளும் ஆசிர்வாதமும் — 4:1-22
அத்தியாயம் 1
1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல், 2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
உண்மையாயிருக்க உற்சாகப்படுத்துதல்
3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து, 4 உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். 5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 8 ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி. 9 அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். 11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். 12 அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். 13 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று. 14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள். 15 ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய். 16 ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; 17 அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான். 18 அந்த நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு இரக்கம்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பலவிதமான உதவிகளையும் நீ நன்றாக அறிந்திருக்கிறாயே.