௧௨
௧ “தரிசனத்தில் அந்த ஆள், தானியேலே, அந்த நேரத்தில், பெரிய அதிபதியாகிய மிகாவேல் தூதன் எழுந்து நிற்பான். மிகாவேல் உனது யூத ஜனங்களுக்கு பொறுப்பானவன். மிகத் துன்பமான ஒரு காலம் வரும். பூமியில் தேசங்கள் தோன்றிய நாள் முதலாக இதுபோன்ற துன்பகாலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தானியேலே, அந்த நேரத்தில், உன் ஜனங்களில் எவருடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். ௨ பூமியில் உள்ள ஜனங்களில் செத்துப் புதைக்கப்பட்டவர்கள் எல்லாரும் எழும்புவார்கள். அவர்களில் சிலர் என்றென்றும் வாழ்வதற்காக எழுந்திருப்பார்கள். ஆனால் சிலர் என்றென்றும் வெட்கமும் வெறுப்பும் அடைவதற்காக எழும்புவார்கள். ௩ ஞானமுள்ள ஜனங்கள் வானத்து ஒளியைப் போன்று பிரகாசிப்பார்கள். ஜனங்களை நல்ல வழியில் வாழக் கற்றுத்தந்த ஞானிகள் என்றென்றைக்கும் வானத்து நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவார்கள்.
௪ “ஆனால் தானியேலாகிய நீ, இச்செய்தியை இரகசியமாக வைத்துக்கொள். நீ இந்தப் புத்தகத்தை மூடிவை. நீ முடிவு காலம்வரை இந்த இரகசியத்தைக் காக்க வேண்டும். அநேக ஜனங்கள் உண்மையான அறிவைத் தேடி அங்கும் இங்கும் அலைவார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவு வளரும்.”
௫ பிறகு தானியேலாகிய நான் வேறு இரண்டு பேரைப் பார்த்தேன். ஒருவன் ஆற்றங்கரையில் எனது பக்கம் நின்றுகொண்டிருந்தான். இன்னொருவன் ஆற்றின் இன்னொரு கரையில் நின்று கொண்டிருந்தான். ௬ சணல் துணி அணிந்திருந்த ஒருவன், ஆற்றின் தண்ணீரின் மேல் நின்றுகொண்டிருந்தான். இருவரில் ஒருவன் அவனிடம் சொன்னான், “இந்த அதிசயங்களெல்லாம் உண்மையாவதற்கு எவ்வளவு காலமாகும்?”
௭ சணல் ஆடை அணிந்து ஆற்றுத் தண்ணீரின் மேல் நின்றவன் தனது வலது கையையும், இடது கையையும் வானத்தை நோக்கி நீட்டினான். அவன் என்றென்றும் ஜீவித்திருக்கிற தேவனுடைய நாமத்தால் ஆணையிட்டதை நான் கேட்டேன். அவன் சொன்னான்: “இது மூன்றும், அரை ஆண்டு காலமும் இருக்கும். பரிசுத்த ஜனங்களின் வல்லமை உடையும். இவை அனைத்தும் இறுதியில் உண்மையாகும்.”
௮ நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், “ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?” என்று கேட்டேன்.
௯ அவன், என்னிடம், “தானியேலே, உன் வாழ்க்கையை நீ தொடர்ந்து நடத்து. இந்த வார்த்தைகள் முடிவுகாலம் வரை இரகசியமாகவும் மறைக்கப்பட்டும் இருக்கும். ௧௦ பலர் சுத்தமாக்கப்படுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் தீயவர்கள் தீமையில் தொடருவார்கள். அக்கெட்டவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் ஞானமுள்ளவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள்.
௧௧ “தினபலிகள் நிறுத்தப்படும். அக்காலம் முதல் அழிவை உண்டாக்கும் பயங்கரம் ஏற்படுத்தப்பட்ட நாள்வரை 1,290 நாள் செல்லும். ௧௨ 1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
௧௩ “தானியேலே நீயோவென்றால் முடிவு வருமட்டும் சென்று வாழ்ந்திரு. உனது இளைப்பாறுதலை முடிவில் நீ பெறுவாய். மரணத்திலிருந்து எழும்பி, உனது பங்கைப் பெறுவாய்” என்றான்.