௨௭
யூதாவின் அரசனான யோதாம்
௧ யோதாம் அரசனானபோது அவனுக்கு 25 வயது ஆகும். இவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள் ஆகும் இவள் சாதோக்கின் மகள் ஆவாள். ௨ கர்த்தர் செய்ய விரும்பியதையே, யோதாம் செய்து வந்தான். அவன் தன் தந்தை உசியாவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தான். ஆனால் தன் தந்தையைப் போல யோதாம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்து நறுமணப் பொருட்களை எரிக்க முயலவில்லை. எனினும் ஜனங்கள் தொடர்ந்து தவறு செய்தனர். ௩ யோதாம் மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாசலைக் கட்டினான். ஓபேலின் மதில்சுவர் மீது அனேக கட்டிடங்களைக் கட்டினான். ௪ யூதாவின் மலைநாட்டில் புதிய நகரங்களையும் கட்டினான். யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். ௫ யோதாம் அம்மோனிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலக் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.
௬ யோதாம் உண்மையாகவே தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால், பலமுள்ளவன் ஆனான். ௭ யோதாம் செய்த மற்ற செயல்களும் போர்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. ௮ யோதாம் 25 வயதில் அரசனானான். அவன் எருசலேமில் 16 ஆண்டுகள் அரசாண்டான். ௯ பிறகு யோதாம் மரிக்க அவனை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவன் தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். யோதாமின் இடத்திலே புதிய அரசனாக ஆகாஸ் வந்தான். ஆகாஸ் யோதாமின் மகன்.