௨௧
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்க்கப் போகிறான்
௧ பின்பு தாவீது வெளியே போனான். யோனத்தான் நகரத்திற்குத் திரும்பிப் போனான். தாவீது நோப் எனும் நகரத்திற்கு ஆசாரியனான அகிமெலேக்கைப் பார்க்கப் போனான்.
அகிமெலேக்கு தாவீதை சந்திக்க வெளியே வந்தான். அவன் பயத்தால் நடுங்கினான். அவன், “ஏன் தனியாக வந்தீர்கள்? உங்களோடு ஏன் யாரும் வரவில்லை?” என்று கேட்டான்.
௨ அதற்கு தாவீது, “அரசன் எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், ‘எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும். நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்’ என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன். ௩ இப்போது உன்னோடு என்ன உணவை வைத்திருக்கிறாய்? எனக்கு 5 அப்பங்களையோ அல்லது உன்னிடம் உள்ள எதையேனும் புசிக்கக் கொடு” என்றான்.
௪ ஆசாரியன் தாவீதிடம், “என்னிடம் சாதாரணமான அப்பங்கள் இல்லை. பரிசுத்த அப்பங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் ஆட்கள் எந்தப் பெண்ணோடும் பாலின உறவு கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவற்றை உண்ணலாம்” என்றான்.
௫ அதற்கு தாவீது, ஆசாரியனிடம், “எங்களோடு பெண்கள் இல்லை. எங்கள் வீரர்கள் போருக்குப் போகும்போது தங்கள் உடலை பரிசுத்தமாக வைத்திருப்பார்கள். எங்கள் வேலை மிகவும் சிறப்பானது. எனவே, விசேஷமாக இன்று இது உண்மை” என்றான்.
௬ பரிசுத்த அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லாததால் ஆசாரியன் அவற்றை தாவீதுக்கு கொடுத்தான். அவை கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மேஜையின் மேல் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் ஆசாரியர் புதிய அப்பங்களை வைப்பர்கள்.
௭ சவுலின் அதிகாரிகளில் ஒருவன் அவர்களோடு இருந்தான். அவன் பெயர் ஏதோமியனான தோவேக்கு ஆகும். அவன் சவுலின் ஒற்றர் தலைவனாவான். கர்த்தருக்கு முன்பாக அவன் காவலில் அடைக்கப்பட்டிருந்தான்.
௮ தாவீது அகிமெலேக்கிடம், “இங்கு ஈட்டியாவது பட்டயமாவது உள்ளதா? அரசனது வேலை முக்கியமானது, அது விரைவாக நடக்கவேண்டும். நான் சடுதியில் புறப்பட்டதால் பட்டயமாவது எந்தவித ஆயுதங்களையாவது எடுத்து வரவில்லை” என்றான்.
௯ அதற்கு ஆசாரியன், “இங்கே பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் மட்டுமே உள்ளது. அது உன்னால் அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. துணியில் சுற்றி ஏபோத்தின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. உனக்கு விருப்பமானால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.
தாவீதோ, “அதனை எனக்குக் கொடு. கோலியாத்தின் வாளைப்போன்று வேறு நல்ல வாள் இல்லை!” என்றான்.
காத்தில் உள்ள எதிரிகளிடத்தில் தாவீது ஓடுகிறான்
௧௦ அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் அரசனான ஆகீஸிடம் சென்றான். ௧௧ ஆகீஸின் வேலைக்காரர் அவனிடம் சொன்னார்கள், “இவன் இஸ்ரவேல் நாட்டின் அரசனான தாவீது, இஸ்ரவேலரால் போற்றப்படுபவன். அவர்கள் ஆடிக்கொண்டே,
“ ‘சவுல் ஆயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்!’ ”
என்று பாடுகின்றனர்.
௧௨ அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் அரசனான ஆகீஸுக்கு மிகவும் பயந்தான். ௧௩ எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.
௧௪ ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்? ௧௫ என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.