௧௮
தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்
௧ சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும்,
யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான்.
௨ சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. ௩ யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். ௪ யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான்.
தாவீதின் வெற்றிகளை சவுல் கவனிக்கிறான்
௫ பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படை வீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! ௬ தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். ௭ பெண்கள்,
 
“சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!”
என்று பாடினார்கள்.
 
௮ இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். ௯ அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுகிறான்
௧௦ மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுர மண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். ௧௧ சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீதுதப்பிவிட்டான்.
௧௨ தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். ௧௩ தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். ௧௪ கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். ௧௫ சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும் மேலும் பயம் வந்தது. ௧௬ ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.
தாவீதுக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்
௧௭ ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.
௧௮ தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் அரசனின் மகளை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.
௧௯ எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
௨௦ சவுலின் அடுத்த மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது. ௨௧ எனவே, “மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்” என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, “இன்று என் மகளை மணமுடிக்கலாம்” என்றான்.
௨௨ சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், அரசனும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய மகளை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.
௨௩ அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “அரசனுக்கு மருகமகனாவது அவ்வளவு எளிதா? அரசனின் மகளுக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.
௨௪ தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். ௨௫ சவுல் அவர்களிடம், “அரசன் உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
௨௬ அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். அரசனின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான். ௨௭ எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். அரசனின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான்.
தன் மகள் மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான். ௨௮ தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது மகள் மீகாள் தாவீதைநேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான். ௨௯ எனவே, சவுலுக்கு தாவீது மீது மேலும் பயம் வந்தது. அவனைத் தனது எதிரியாக எப்போதும் எண்ணி வந்தான்.
௩௦ பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.