21
புதிய எருசலேம்
1 பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்”* 21:1 ஏசா. 65:17 ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை. 2 அப்பொழுது நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைக் கண்டேன். அது இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்தது; அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட, ஒரு மணமகளைப்போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 அப்பொழுது நான், அரியணையில் இருந்து வருகின்ற, ஒரு பெரும் குரல் இவ்வாறு சொல்வதைக் கேட்டேன்: “இறைவன் தங்குகின்ற இடம், இப்பொழுது மனிதருடன் இருக்கின்றது. அவர் மனிதருடனேயே குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து, அவர்களுடைய இறைவனாயிருப்பார். 4 ‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது’† 21:4 ஏசா. 25:8 புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், பழைய முறைமைகள் எல்லாம் இல்லாமற்போயிற்று” என்றது.
5 அரியணையில் அமர்ந்திருந்தவர், “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்றார். மேலும் அவர், “இதை எழுதிவை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் சத்தியமுமாய் இருக்கின்றன” என்று சொன்னார்.
6 பின்பு அவர், என்னிடம் சொன்னதாவது: “அது செய்தாயிற்று. நானே அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன். நானே தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். தாகமாய் இருக்கிறவனுக்கு, வாழ்வுதரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாய் குடிக்கக் கொடுப்பேன். 7 வெற்றி பெறுகிறவர்கள், இவற்றையெல்லாம் உரிமையாக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள். 8 ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.”
புதிய எருசலேமும் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியும்
9 அப்பொழுது ஏழு கிண்ணங்களில் ஏழு கடைசி வாதைகளை நிறைத்து வைத்திருந்த, ஏழு இறைத்தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான். 10 அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான். 11 அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது. 12 அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. 13 அந்த நகரத்தின் கிழக்குப் பக்கத்தில் மூன்றும், வடக்குப் பக்கத்தில் மூன்றும், தெற்குப் பக்கத்தில் மூன்றும், மேற்குப் பக்கத்தில் மூன்றுமாக, வாசல்கள் இருந்தன. 14 அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
15 என்னுடன் பேசிய தூதன், அந்த நகரத்தையும், அதன் வாசல்களையும், அதன் மதில்களையும் அளப்பதற்கென தங்கத்திலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான். 16 அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் சம அளவாயிருந்தன. அவன் அந்த அளவுகோலினால் அந்த நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோமீட்டர் நீளமாய் இருந்தது. அதன் அகலமும் அதன் உயரமும்கூட அதே அளவாகவே இருந்தன. 17 அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். அந்த மதிலின் உயரம் சுமார் 65 மீட்டர் அளவாய் இருந்தது. மனிதர் பயன்படுத்தும் அளவுகோலையே, அந்த இறைத்தூதனும் பயன்படுத்தினான். 18 அந்த மதில் படிகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் சுத்த தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கம் கண்ணாடியைப்போல் தூய்மையாய் இருந்தது. 19 அந்த நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாவது அஸ்திபாரக்கல் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல், 20 ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரெண்டாவது சுகந்திக்கல் ஆகியவைகளாயிருந்தன. 21 பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒரு முத்தைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவுள்ள கண்ணாடியைப் போன்ற சுத்தத்தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
22 அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம். 23 சூரியனும் சந்திரனும் அந்த நகரத்தில் ஒளிகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளியைக் கொடுக்கிறது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்காய் இருக்கிறார். 24 மக்கள் அந்த வெளிச்சத்தினாலே நடப்பார்கள். பூமியின் அரசர் தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருவார்கள். 25 அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை. 26 மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும். 27 அசுத்தமான எதுவும் ஒருபோதும் அதற்குள் செல்லமாட்டாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கிறவனோ ஏமாற்றுகிறவனோ அதற்குள் செல்லமாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில், தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்களாய் இருக்கிறவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.