2
* 2 இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. 1 யெகோவா தமது கோபத்தின் மேகத்தால்
சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்;
இஸ்ரயேலின் சீர்சிறப்பை
வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்;
அவர் தமது கோபத்தின் நாளில்
தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை.
2 யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும்
யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்;
யூதா மகளின் கோட்டைகளை
தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார்.
அரசுகளையும், அதன் இளவரசர்களையும்
அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார்.
3 அவருடைய கோபத்தினால்
இஸ்ரயேலின் முழு பலத்தையும்† 2:3 மூல மொழியில் கொம்பு என எழுதப்பட்டுள்ளது. இல்லாமல் பண்ணினார்.
அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார்.
அவர் யாக்கோபின் நாட்டில்,
தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற,
கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.
4 அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்;
அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது.
அவர் பகைவனைப்போல
கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்;
சீயோன் மகளின் கூடாரத்தில்
தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார்.
5 ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்;
அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்;
அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி,
அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார்.
யூதாவின் மகளுக்கு புலம்பலையும்,
துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார்.
6 அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்;
அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார்.
யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும்,
ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்;
தமது கடுங்கோபத்தில் அரசனையும்,
ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.
7 யெகோவா தமது சொந்த பலிபீடத்தை புறக்கணித்து,
தமது பரிசுத்த இடத்தையும் கைவிட்டார்.
அவளுடைய அரண்மனைகளின் சுவர்களை
பகைவரின் கையில் ஒப்புக்கொடுத்தார்;
அவர்கள் நியமித்த பண்டிகை நாளிலிருப்பதுபோல்
யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
8 யெகோவா சீயோன் மகளைச் சுற்றியுள்ள சுவரை
அழிப்பதற்குத் தீர்மானித்துவிட்டார்.
அவர் ஒரு அளவு நூலை நீட்டி அளந்தார்.
அவர் அழிப்பதிலிருந்து தமது கையை விலக்கிக் கொள்ளவில்லை.
அதனால் அவர் அரண்களையும், மதில்களையும் புலம்பச் செய்தார்;
அவை ஒன்றாக பாழாய்ப்போயின.
9 எருசலேமின் வாசல்கள் நிலத்திற்குள்ளே புதைந்து கிடக்கின்றன;
அவைகளின் தாழ்ப்பாள்களை அவர் உடைத்து அழித்துவிட்டார்.
அவளுடைய அரசனும், அவளுடைய இளவரசர்களும்
நாடுகளுக்கு நடுவே நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.
சட்டம் இல்லாமற்போயிற்று.
அவளுடைய இறைவாக்கு உரைப்போருக்கு
யெகோவாவிடமிருந்து தரிசனங்கள் கிடைப்பதில்லை.
10 சீயோன் மகளின் முதியோர்
மவுனமாய் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்;
அவர்கள் தங்கள் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு,
துக்கவுடையை உடுத்திக்கொண்டார்கள்.
எருசலேமின் இளம்பெண்கள்
தங்கள் தலைகளை தரைமட்டும் தாழ்த்தியிருக்கிறார்கள்.
11 அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று.
நான் எனக்குள் வேதனையடைகிறேன்.
என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது.
ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்.
பிள்ளைகளும் குழந்தைகளும்
பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.
12 அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல்,
பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம்,
“அப்பமும், பானமும் எங்கே?”
எனக்கேட்டு தாயாரின் கைகளில்
உயிரை விடுகிறார்கள்.
13 எருசலேம் மகளே!
உனக்கு என்ன சொல்வேன்?
உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்?
சீயோன் கன்னி மகளே,
நான் உன்னைத் தேற்றும்படி
எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்?
உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே.
யார் உன்னைக் குணமாக்க முடியும்?
14 உனது இறைவாக்கு உரைப்போரின்
தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே;
உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி,
அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை.
அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும்,
வழிதவறச் செய்வதுமே.
15 உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும்,
உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்;
எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள்
கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது:
“அழகின் நிறைவு என்றும்,
பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும்
அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”
16 உன் பகைவர்கள் எல்லோரும்,
உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்;
அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது:
“நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம்.
இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம்.
அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.”
17 யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்;
அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை,
நிறைவேற்றிவிட்டார்.
எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார்,
பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார்.
அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.
18 மக்களின் இருதயங்கள்
ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன.
சீயோன் மகளின் மதிலே,
உனது கண்ணீர் இரவும் பகலும்
ஒரு நதியைப்போல் ஓடட்டும்;
உனக்கு ஓய்வு கொடாதே,
கண்ணீர்விடாமல் இருக்காதே.
19 எழும்பு, இரவிலே
முதற்சாமத்தில் கதறி அழு,
யெகோவாவினுடைய சமுகத்தில்
உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று.
ஒவ்வொரு தெருவின் முனையிலும்,
பசியினால் மயங்கி விழும்
உனது பிள்ளைகளின் உயிருக்காக
அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.
20 “யெகோவாவே, கவனித்துப் பாரும்:
நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ?
பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ?
தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ?
ஆண்டவரின் பரிசுத்த இடத்தில்
ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ?
21 “வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின்
புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்;
வாலிபரும், கன்னிப்பெண்களும்
வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்;
இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர்.
22 “ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல,
திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர்.
யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை,
பிழைக்கவுமில்லை;
நான் பராமரித்து வளர்த்தவர்களை,
என் பகைவன் அழித்துவிட்டான்.”