இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது
17
1 யூதாவின் அரசனாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் மகனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் அரசனானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான்.
2 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட காரியங்களையே ஓசெயா செய்துவந்தான். ஆனால் இவன் இதற்கு முன் இஸ்ரவேலை ஆண்ட அரசர்களைப் போன்று அவ்வளவு கெட்டவனாக இல்லை.
3 அசீரியாவின் அரசனான சல்மனாசார் என்பவன் இவனுக்கு எதிராகப் போர்செய்ய வந்தான். ஓசெயா சல்மனாசாரின் சேவகன் ஆகி அவனுக்கு வரி செலுத்தி வந்தான்.
4 ஆனால், பிறகு ஓசெயா தனக்கு எதிராகச் சதி செய்வதை அசீரியா அரசன் அறிந்துகொண்டான். ஓசெயா எகிப்து அரசனுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தான். எகிப்து அரசனின் பெயர் சோ ஆகும். அந்த ஆண்டில், முன்னைய ஆண்டுகளை போன்று ஓசெயா சல்மனாசாருக்கு வரி செலுத்தவில்லை. அதனால் சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்து சிறையில்போட்டான்.
5 பிறகு அசீரிய அரசன் இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான்.
6 இஸ்ரவேலின் அரசனான ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய அரசன் சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான்.
7 இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர்.
8 அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் அரசர்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர்.
9 இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின.
இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள்.
10 இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள்.
11 இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது.
12 கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.
13 இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பி தாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார்.
14 ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை.
15 ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது.
16 ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற் கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர்.
17 நெருப்பில் தங்கள் மகன்களையும் மகள்கனையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள்.
18 எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை.
யூத ஜனங்களும் குற்றவாளியானது
19 யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர்.
20 இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார்.
21 கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் மகனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு அரசனாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான்.
22 எனவே இஸ்ரவேலர் யெரொ பெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி
23 தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
சமாரியர்களின் தொடக்கம்
24 அசீரியாவின் அரசன் இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.
25 அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன.
26 சிலர் அசீரியாவின் அரசனிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள்.
27 அதற்கு அசீரியாவின் அரசன், “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.
28 எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.
29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர்.
30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும்,
31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.
32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர்.
33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.
34 இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை.
35 இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது,
36 ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும்.
37 நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது.
38 நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது.
39 உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார்.
40 ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க் கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர்.
41 எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.