எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!
6
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக்கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.
“இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.
10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.
12 “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். 13 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களி (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) 14 நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.
16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 18 நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். 19 கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.
தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்
20 “வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய மகன் உன்னிடம் கேட்கலாம். 21 நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார். 22 கர்த்தர் அங்கே சிறந்த அற்புதங்களைச் செய்தார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பே எகிப்தின் மீதும், பார்வோன் மீதும், அவன் குடும்பம் அனைத்தின் மீதும், கொடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். 23 பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார், 24 கர்த்தர் போதித்த அனைத்தையும் நாம் பின்பற்றும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். நாம் நமது தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அப்போது கர்த்தர் நாம் இன்று இருக்கிற வண்ணமாக எப்போதும் வாழ்ந்து செழிப்பாக இருக்கும்படிச் செய்வார். 25 நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.